வெள்ளை மாளிகை அருகே விபத்து !

Wednesday, May 4th, 2016

அமெரிக்காவின் சி.எஸ்.எக்ஸ். நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு ரெயில் ஒன்று மேரிலாண்ட் மாகாணத்தின் கும்பர்லேண்ட் நகரில் இருந்து வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹாம்லெட் நகருக்கு 3 என்ஜின் மற்றும் 175 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அதில், காகிதம் மற்றும் சலவை சோப்பு தயாரிப்பதற்கு தேவையான சோடியம் ஹைராக்சைடு ரசாயனப் பொருள் ஏற்றப்பட்டு இருந்தது. அந்த ரெயில் நேற்று முன்தினம் காலை அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் வழியாக சென்றபோது, வடகிழக்கு வாஷிங்டன் பகுதியில் ரோடே ஐலன்ட் அவென்யூ ரெயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது. அப்போது ரெயிலின் 13 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. எனினும், ரெயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு இருந்த அபாயம் விளைவிக்கும் ரசாயன பொருட்கள் வெளியேறியதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினரும், சி.எஸ்.எக்ஸ். நிறுவனத்தின் அவசர நிலை ஊழியர்களும் விரைந்து சென்று தடம்புரண்ட ரெயில் பெட்டிகளில் இருந்து மேலும் இரசாயன பொருட்கள் வெளியேறாமல் அடைப்பான்களை செருகி தடுத்தனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் வெள்ளை மாளிகையில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்ததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என்றபோதிலும் இந்த விபத்தால் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் நேற்றுமுன்தினம் வாஷிங்டன்-சிகாகோ நகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த இரு நகரங்களில் இருந்தும் பல்வேறு நகரங்களுக்குச் செல்லவேண்டிய பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று வாஷிங்டன் நகர மேயர் முரியல் பவுசர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மத்திய வாஷிங்டன் நகரின் 112 ஆண்டு கால சுரங்கப் பாதை வழியாக அபாயகரமான ரசாயன பொருட்கள் ஏற்றிய ரெயில்கள் ஹாம்லெட் நகருக்கு செல்வதால் அதை தடை செய்யவேண்டும் என்று வாஷிங்டன் நகரவாசிகள் கடந்த சில ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு தொடுத்து போராடி வந்தனர். தவிர, இந்த சுரங்கப்பாதையை புதுப்பித்து கட்டவேண்டும் என்று அவர்கள் போராடினர்.

எனினும், 170 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான(சுமார் ரூ.1,105 கோடி) வீட்டு உபயோக பொருள் தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து மத்திய வாஷிங்டன் நகரம் வழியாக சி.எஸ்.எக்ஸ். ரெயில் நிறுவனத்தின் மூலம் ரசாயனப் பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Related posts: