வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் தகுதியற்றவர் -ஒபாமா!

Saturday, April 2nd, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர், தனக்கு ஆதரவு திரட்டிவரும் நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என டிரம்ப் கூறி, சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்களின் அதிருப்தியை தேடிக் கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, கொரிய தீபகற்பத்துக்கான அணு கொள்கை மற்றும் உலகளாவிய அளவிலான நமது அணு கொள்கை தொடர்பாக டொனால்ட் டிரம்ப்பின் அறியாமையை காட்டுகிறது என்றார்.
மேலும், ‘ஆசிய பசிபிக் கண்டத்தில் அமெரிக்காவின் அமைதி, வளமை, நிரந்தரத்தன்மை ஆகியவற்றுக்கு கொரியா மற்றும் ஜப்பானுடன் நாம் கடைபிடித்துவரும் வெளியுறவுக் கொள்கைகளே மூலக்காரணமாக அமைந்துள்ளது. இந்த நல்லுறவின் மூலமாக அணு ஆயுதப் பெருக்கம் மற்றும் மோதலை நாம் தவிர்த்துள்ளோம். இரண்டாம் உலகப்போரின்போது நமது நாட்டை சேர்ந்த ஆண்களும், பெண்களும் செய்த மகத்தான தியாகத்தை மூலதனமாக்கி இந்த முன்னேற்றத்தை நாம் எட்டியுள்ளோம்.

இந்த கொள்கைகளுக்கு குழிபறிக்க யாரும் முயற்சிக்க கூடாது. அப்படி முயற்சிப்பவர்கள் வெள்ளை மாளிகையில் அமர தகுதியற்றவர்கள். ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறியவருக்கு நமது நாட்டின் வெளியுறவு கொள்கை, கொரிய தீபகற்பத்துக்கான அணு கொள்கை மற்றும் பொதுவாக உலகத்தைப் பற்றியேகூட எதுவுமே தெரியாது என்பதைதான் அவரது பேச்சு சுட்டிக்காட்டுகிறது” என்றார்

Related posts: