வட – தென் கொரிய நாடுகள் ஆக. 13- இல் பேச்சுவார்த்தை!

Saturday, August 11th, 2018

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான மூன்றாவது சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், கிம் ஜோங்-உனுக்கும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா ஒப்புக் கொண்டது. பதிலுக்கு வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்காவும் சம்மதித்தது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்காக கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் இடையே 3-ஆவது முறையாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணு ஆயுதங்களை வட கொரியா கைவிடுவது மற்றும் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது ஆகியவை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் வெளிப்படுத்தும் கருத்துகளால் அவ்வப்போது பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, அமெரிக்கா – வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

Related posts: