வட கொரியாவினால் அதி நவீன ஆயுதம் பரிசோதனை!

Saturday, November 17th, 2018

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்தத் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

வட கொரியாவின் பாதுகாப்பு அறிவியல் அகாதெமியின் சோதனைத் தளத்துக்கு அதிபர் கிம் ஜோங்-உன் அண்மையில் வருகை தந்தார்.

அங்கு, புதிதாக உருவாக்கப்பட்ட அதி நவீன ஆயுதமொன்றின் சோதனையை அவர் பார்வையிட்டார். அந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அந்த ஆயுதம் மற்றும் சோதனை குறித்த விவரங்களை அந்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றன.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தத் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

Related posts: