வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது – ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தல்!

Wednesday, May 17th, 2017

உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுடன், மிரட்டல் விடுக்கக்கூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா திங்கள் அன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியிருந்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட கொரியா மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுடன், மிரட்டல் விடுக்கக்கூடாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வலியுறுத்தியுள்ளார். சீனாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த புட்டின், அங்கு வட கொரியா தொடர்பாக கருத்து தெரிவித்திருந்ததுடன், கடந்த சில வாரங்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் மூன் ஜே-இன் வெற்றி பெற்றதை அடுத்து சுமூகமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மூன் பதவியேற்ற சில நாட்களிலேயே வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியது மீண்டும் குழப்பமான சூழ்நிலையை நீடிக்கச் செய்துள்ளது.

Related posts: