யேமன் மோதலில் 10,000 பேர் பலி – ஐ.நா!

Thursday, September 1st, 2016

கடந்த 18 மாத கால சிவில் யுத்தத்தில் யேமனின் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 6,000க்கு அதிகம் என முன்னர் மதிப்பிட்டிருந்த ஐக்கிய நாடுகள், அந்த எண்ணிக்கையை சடுதியாக மீளத் திருத்தியமைத்து, 10,000 வரையானோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், யேமனின் தலைநகர் சானாவிலிருந்து, கடந்த செவ்வாய்க்கிழமை (30) கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் ஜேமி மக்கோல்ட்ரிக், புதிய எண்ணிக்கையானது, யேமனிலுள்ள மருத்துவ வசதிகளிலிருந்தான உத்தியோகபூர்வ தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியுள்ளார்.

சில பகுதிகளில் மருத்துவ வசதிகள் இல்லை என்பதுடன், உத்தியோகபூர்வ பதிவு இல்லாமல் மக்கள் புதைக்கப்படுகின்ற நிலையில், மேற்குறித்த எண்ணிக்கையானது மேலும் உயரலாம் என மக்கோல்ட்ரிக் மேலும் தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கையானது, இதை விட மேலும் அதிகம் என தங்களுக்குத் தெரியும். ஆனால், தங்களால் எவ்வளவு எனக் கூறமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எண்ணிக்கையானது, முழுமையில்லாமல் இருக்கலாம் ஏனெனில், இயங்கும் சுகாதார சேவைகளிடமிருந்தே தாம் எண்ணிக்கையைப் பெற்றதாகவும், சில பகுதிகளில், இயங்குகின்ற சுகாதார சேவைகள் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மோதலால், மூன்று மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 200,000 பேர் வெளிநாடுகளில் புகலிடம் தேடியுள்ளதாக மக்கோல்ட்ரிக் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இடம்பெயர்ந்துள்ள 900,000 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்ப முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர, யேமனின் 26 மில்லியன் சனத்தொகையில், 14 மில்லியன் பேருக்கு உணவுதவி தேவை என்றும் ஏழு மில்லியன் பேர், உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கோல்ட்ரிக் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர், 6,500 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகளாலும் தொண்டுக் குழுக்களாலும் இவ்வாண்டு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா தலைமையிலான அரேபியக் கூட்டணியால் ஆதரவளிக்கப்படும் அரசாங்கப் படைகளுக்கும் ஈரானால் உதவியளிக்கப்படும் ஹூதி போராளிகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர, மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயு முடிவடைந்துள்ளன.

யேமனில் நீண்ட காலம் ஜனாதிபதியாகவிருந்த அலி அப்துல்லாஹ் சாலே, 2012ஆம் ஆண்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து யேமன் பிரச்சினையில் தவிக்கின்றதுடன், தற்போது, ஹூதிகளுடன் இணைந்து சாலேயின் படைகள் போரிடுகின்றன. சவூதி தலைமையிலான அரபுக் கூட்டணி, ஜனாதிபதி  அப்ட்-றப்பு மன்சூர் ஹாடிக்கு ஆதரவாக, ஹூதிகள் மீது, கடந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கம் விமானத் தாக்குதல்களை மேற்கொள்கிறது.

Related posts: