மீனவரை கொன்ற இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவார்?

Monday, March 13th, 2017

தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்வது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சுடப்பட்டு தமிழக மீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் 6வது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை சென்றமத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது –

இச் சம்பவம் நடந்த 2 மணி நேரத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம், இந்தியா சார்பில் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை தெரிவிக்குமாறு கூறினார். இலங்கை அரசும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற போது இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சுமார் 1,830 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசைப் பொறுத்தவரை, மீனவர்கள் பிரச்சினையில் கால தாமதம் செய்வதில்லை.கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்களை தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்பதும் ஒரு முக்கியமான முடிவாகும்.

இந்த ஒப்பந்தத்தை, தற்போது இலங்கை கடற்படை மீறியிருக்கிறது.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இலங்கை கடற்படையினரை கைது செய்ய தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கு வந்துள்ளேன் என்றார்.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் தாயார் மேரி உட்பட மீனவப் பெண்களிடம் நிர்மலா சீதாராமனும், பொன். ராதாகிருஷ்ணனும் பேசி சமாதானம் செய்தனர். தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் மீனவர் பிரதிநிதிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் அளித்த உறுதிமொழி, மீனவர்களுக்கு தேவையான கோரிக்கைகள், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு, இலங்கை அரசுடன் முக்கிய பேச்சு ஆகிய விஷயங்களை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மீனவ பிரதிநிதிகள் இன்று முதல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.தொடர்ந்து மீனவர் பிரிட்ஜோ உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்வதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை என மீனவர் சங்கத்தை சேர்ந்த எமரால்டு கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: