போலாந்து நாட்டின் புதிய பிரதமாராக மேத்யூஸ் மொராவெய்கி பதவியேற்றார்!

Wednesday, December 13th, 2017

போலாந்து நாட்டின் பிரதமராக இருந்த பீட்டா சைட்லோ இராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்யூஸ் மொராவெய்கி பதவியேற்றுள்ளார்.

போலாந்து நாட்டின் பிரதமராக பீட்டா சைட்லோ கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் சட்டம் மற்றும் நீதி கட்சியை சேர்ந்தவராவார். இந்நிலையில், போலாந்து நாட்டின் எதிர்கட்சியினர் சார்பில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(11) குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மேல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பீட்டா சைட்லோ எளிதாக வெற்றி பெற்றார். இருப்பினும் சைட்லோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் அளித்தார். அவர் அங்கம் வகிக்கும் சட்டம் மற்றும் நீதி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து துணை பிரதமரும், வருவாய்த்துறை மந்திரியுமான மேத்யூஸ் மொராவெய்கியை புதிய பிரதமராக நியமிக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி போலாந்து நாட்டின் புதிய பிரதமாராக மேத்யூஸ் மொராவெய்கி நேற்று(11) பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு போலாந்து ஜனாதிபதி அண்டெர்செஜ் டுடா பதவி பிரமானம் செய்து வைத்தார். மேலும் போலாந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: