பொகோட்டாவில் குண்டு வெடிப்பு: பொலிஸார் ஒருவர்பலி, 30 பேர் காயம்!

Monday, February 20th, 2017

கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் (Bogota), நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில்  பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது, அப்பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாகவும் அதனால் பொலிஸாரே இந்த வெடிப்பு சம்பவத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்டா மரியா (Santamaria) எனும் பகுதியில் காளை அடக்கும் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்ததை முன்னிட்டே பொலிஸார் குறித்த பகுதியில் அதிகளவில் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொகோட்டா மேயர் என்ரிக்கே பெனலோஸா (Enrique Penalosa), சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் குறித்த வெடிப்பு தொடர்பில் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மேயர், “இது ஒரு தீவிரவாத தாக்குதலே. இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை நாம் விரைவில் கண்டுபிடிப்போம். அதன் பொருட்டு எம்மால் ஆன அனைத்து உத்திகளையும் நாம் மேற்கொள்வோம். எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கியமான ஆதாரம் ஒன்றை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விரைவில் நல்ல செய்தி ஒன்றை நாம் மக்களுக்கு அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

காளை அடக்கும் போட்டியை நடத்துவதற்கு கடந்த மாதம் அரசாங்கம் அனுமதியளித்ததை தொடர்ந்து, விலங்கு உரிமை ஆர்வலர்களின் நடமாட்டம் குறித்த பகுதியில் இருந்ததாகவும் அதனால் அவர்களே இந்த குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Untitled-2 copy

Related posts: