பாடசாலை மாணவருக்கு ரூ.153 கோடி இழப்பீடு!  நீதிமன்று உத்தரவு!

Friday, July 1st, 2016

அமெரிக்காவில் சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு சுமார் 153 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கலிபோர்னியா நகரில் உள்ள Bakersfield என்ற மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு மிட்ச் கார்டர்(அப்போதைய வயது 17) என்ற மாணவர் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், Bakersfield பள்ளிக்கும் Golden West என்ற பள்ளிக்கும் இடையே கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, மிட்ச் கார்டரை கோழி உடையில் மேடைக்கு செல்லுமாறு பள்ளி தலைமை நிர்வாகி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். எதிரணியின் தலைமை நிர்வாகியை அவமதிக்க இவ்வாறு செல்லுமாறு மாணவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

மாணவரும் அதே உடையில் மேடைக்கு சென்றபோது இரு மாணவர்கள் தாக்கியதால் அவர் உடையை அணிய மறுத்துள்ளார். ஆனால், உடையை நீக்கினால் 75 டொலர் அபாரதம் செலுத்த வேண்டும் என நிர்வாகி மிரட்டியதால், மாணவர் அதே கோழி உடையில் மேடைக்கு சென்றுள்ளார்.

மாணவரின் உடையால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள் அவர் மீது விழுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவருக்கு தலையில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனால், நினைவு குறைபாடும் மன அழுத்தமும் கூடி மாணவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

மேலும், சிகிச்சைக்காக அவர் ஒரு லட்சம் டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளார். மாணவருக்கு இழைத்த கொடுமையை கண்டித்து பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, மாணவரின் மீது வன்முறைத்தனமான தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10.5 மில்லியன் டொலர்(153,72,00,000 இலங்கை ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்

Related posts: