பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு !

Friday, September 23rd, 2016

காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதில்லை என ஐ.நா. சபை கைவிரித்து விட்டது. இது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசினார். எதிர்பார்த்ததுபோலவே அதில் அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா ஆயுத குவிப்பில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. அதை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.தெற்கு ஆசியாவில் மோதல்தான் எங்கள் தலைவிதி என்றாகி விடக்கூடாது. இந்தியாவுடன் அமைதியை பராமரிக்கத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முன்நிபந்தனைகளை இந்தியா விதிக்கிறது.

இரு நாடுகளின் நலனையொட்டித்தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். எங்களுடனான கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு அவர்கள் அத்தியாவசியம் தேவை. குறிப்பாக காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். போர் பதற்றம் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும்.

தெற்காசியாவில் நிலவுகிற பதற்றத்தை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் தெற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த முடியாது.காஷ்மீரில் இளம்தலைவரான (ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி) பர்கான் வானி இந்திய படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரிகளின் சொந்த எழுச்சியை வழக்கம்போல, இந்தியா 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டு அடக்குகிறது. இந்திய படைகளின் மேலாதிக்க நிலை காரணமாகத்தான் காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை பாகிஸ்தான் ஆதரிக்கிறது.

பாகிஸ்தான், இந்தியாவுடன் ஆயுதப்போட்டியில் ஈடுபட விரும்பவில்லை. காஷ்மீரில் இருந்து இந்தியா படைகளை விலக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நவாஸ் ஷெரீப் பேசிக்கொண்டிருந்தபோது பலூசிஸ்தான் மக்களும், இந்திய மக்களும் ஐ.நா. சபைக்கு வெளியே பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் நடைபெற்று வருகிற வன்செயல்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், “பலூசிஸ்தானுக்கு விடுதலை வேண்டும், பாகிஸ்தான் ஒழிக, பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் இருந்து உலகத்தை காக்க வேண்டும்” என முழக்கமிட்டனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர் இந்தியாவுக்கு எதிரான ஆவணங்களின் தொகுப்பை வழங்கினார். ஆனால் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்ற நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை பான் கி மூன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

அவர்களிடையேயான சந்திப்புக்கு பின்னர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பாகிஸ்தான், இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித்தான் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி கூறினார்” என குறிப்பிட்டார்.காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்பதை ஐ.நா. சபை இதன்மூலம் தெளிவுபடுத்தி விட்டது.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச விவகாரம் ஆக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சிக்கு இது பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

Untitled-1 copy

Related posts: