பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு மிரட்டல் கடிதம் கொண்டவந்த புறா சிக்கியது!
Monday, October 3rd, 2016
பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் கடிதம் எடுத்து வந்த புறா சிக்கியது. இதேபோல் வந்த 2 பலூன்களும் கைப்பற்றப்பட்டது.
இந்திய இராணுவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 38 பேரை கொன்றது. இதை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தானியர்கள் நூதன முறையில் இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே உள்ள சிம்பால் என்னும் இடத்தில் இந்திய ராணுவ நிலை அருகே பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த சாம்பல் நிற புறா ஒன்று எல்லை பாதுகாப்பு படையினரிடம் நேற்று சிக்கியது. அதன் கால்களில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்தது. அதைப் பிரித்துப் படித்த படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கடிதத்தில், “1971-ம் ஆண்டு (இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்த வருடம்) இருந்தவர்களைப் போல் எங்களை மோடி கருதி விடவேண்டாம். தற்போதுள்ள ஒவ்வொரு சிறுவனும், இந்தியாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறான்” என்று எழுதப்பட்டு இருந்தது.
இதுபற்றி பதன்கோட் போலீசார் கூறும்போது, “புறா பிடிபட்டபோது அதனுடன் கடிதமும் இருந்தது. அந்த புறா தற்போது எங்களின் பிடியில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இதேபோல், மோடியின் முகவரிக்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒன்றாக இணைத்து பறக்கவிடப்பட்ட 2 மஞ்சள் நிற பலூன்கள் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தினாநகர் பகுதியில் உள்ள கெசால் என்ற கிராம பகுதியில் நேற்று முன்தினம் தாழ்வாக பறந்து வந்தது.
அந்த பலூன்களை கிராமவாசி ஒருவர் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தார். அவற்றின் மீது ஒரு துண்டு தாளில் உருது மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதமும் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் ‘உங்களுடைய (மோடி) தாக்குதலுக்கு பழிவாங்குவோம். அயூப்பின் போர் வாள் இன்னும் எங்களுடன்தான் இருக்கிறது’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே தினாநகர் பகுதியில்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 4 போலீசார் உள்பட 7 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.

Related posts:
|
|
|


