பதவி விலக மறுக்கும் முகாபே – சிம்பாவேயில் பதற்றம்!

Friday, November 17th, 2017

ஜிம்பாப்வே ஜனாதிபதி பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என முகாபே உறுதிபட தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க இராணுவம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே ஜனாதிபதி முகாபேவுக்கு எதிராக ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில், வீட்டுச் சிறையில் இருக்கும் முகாபேயுடன் சமாதான பேச்சுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்று இந்த நடவடிக்கையில் இறங்கியது. இந்த நிலையில் முகாபே தாம் பதவி விலகப் போவதில்லை எனவும், தமது பதவி காலத்தை நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.ஆனால் முகாபேயின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள இராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு, முன்னாள் துணை ஜனாதிபதி Emmerson Mnangagwa தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த அரசு அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் எனவும், அதன் பின்னரே தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.மட்டுமின்றி இந்த 5 ஆண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே புதிய அரசின் முக்கிய பொறுப்பாக இருக்கும் எனவும்  இராணுவம் தெரிவித்துள்ளது.

93 வயதாகும் முகாபேவிடம் இருந்து நீண்ட 37 ஆண்டு கால ஆட்சியை கடந்த புதன்கிழமை ராணுவம் கைப்பற்றியது மட்டுமின்றி, முகாபேவை வீட்டுச் சிறையிலும் வைத்துள்ளது.இதற்கிடையே ராபர்ட் முகாபே தங்கி உள்ள பகுதி மற்றும் அதிகாரிகள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பகுதியிலும், ஹராரே நகரின் வடக்கு பகுதியிலும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருக்களிலும் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்டது. எனவே, ராணுவத்துக்கும், முகாபே ஆதரவு படைகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.ஆனால் இந்த தகவலை ராணுவம் மறுத்துள்ளதுடன் நாட்டை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். நாட்டுக்கு எதிராக இருப்பவர்களை களை எடுத்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் நிலைமை சீரடைந்து விடும் என கூறியுள்ளது.

Related posts: