துருக்கி தூதரக மோதல்: குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Friday, May 19th, 2017

அமெரிக்காவில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், துருக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு துருக்கி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், துருக்கிய தூதுவர் மாளிகைக்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதன்போது 11 பேர் காயமடைந்ததுடன், இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளில் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை உதைப்பதும், அடிப்பதும் பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பொலிஸ் தரப்பில் ‘அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான கொடூரமான தாக்குதல் சம்பவம்’ என்று விபரிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியை வரைவேற்பதற்காக கூடிநின்ற படையினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தூண்டிவிட்டதாகவும், தற்காப்பிற்காக அவர்கள் தாக்கியதாகவும் துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை சம்பவத்தால் தாம் கவலை அடைந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் துருக்கி பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டனர் என்பதை தாம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை என்பது சுதந்திர பேச்சுவார்த்தைக்கு சிறந்த பதிலடி அல்ல என்றும், அனைத்து இடங்களிலும் மக்கள் தமது உரிமைகளை வெளிப்படுத்துவதற்கும், அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தாம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: