தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் நிலையில் முன்னேற்றம்!

Thursday, July 12th, 2018

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் திகதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனை உடையும், முகமூடியும் சிறுவர்கள் அணிந்திருக்கிறார்கள், அதில் ஒருவர் வெற்றிச் சின்னத்தை காட்டுகிறார். அனைத்துச் சிறுவர்களும் உடல் எடையை இழந்துள்ள நிலையில், ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த பின்னர் வீட்டிலிருந்து இரு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் இன்று முதல் வழக்கமான உணவுகளை சாப்பிட்டுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: