ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.இந்த சட்ட வரைவு தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்டது.
Related posts:
|
|