ஜப்பானில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து விழுந்தன “அணுமின் நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை” என அறிவிப்பு

Friday, April 15th, 2016

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது கயூஷில் தீவில் உள்ள குமட்டோ நகரின் கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக் கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜப்பானில் அதிவேகமான இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த பூகம்பம் குறித்து ஜப்பான் அதிபர் ஷினோ அபே கூறுகையில் ‘பூகம்ப நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதில் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம்’ என்றார்.

இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சில கட்டிடங்களில் தீப்பிடித்து எரிந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் சேத விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என ஜப்பான் அரசின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் 34 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மாஷிகி நகரில் உள்ள கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும், அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் மையம் கொண்ட தென்மேற்கு பகுதியான கயூஷ் தீவு மற்றும் அருகில் உள்ள ஷிகாகோ பகுதியில் 3 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த நிலை நடுக்கத்தினால் அந்த அணுமின் நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அணு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.இந்த பூகம்பத்தால் குமட்டோ பகுதியில் உள்ள 16 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள 38 ஆயிரம் வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பும் நிறுத்தப்பட்டது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 45 பேர் குமட்டோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: