ஜப்பானில் தொடர் மழை : நில சரிவால் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு!

Monday, July 9th, 2018

ஜப்பான் மேற்கு பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 88 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.  58 பேரை காணவில்லை.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

வெள்ளத்தில் வீடுகள் பல அடித்து போய்விட்டன.  2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  2,310 பேர் நேற்று மாலை வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து இன்றும் சில பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  நில சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கி உள்ளனர்.  சிலர் மேற்கூரைகளில் தங்கியுள்ளனர்.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண் மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.

இராணுவம், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பிரதமர் ஷின்ஜோ அபே கூறும்பொழுது, இன்னும் நிறைய பேரை காணவில்லை.  பலருக்கு உதவி தேவையாக உள்ளது.  தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என கூறினார்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.  சில பகுதிகளில் ரெயில் சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கடந்த வெள்ளி கிழமை ஷின்கான்சென் பகுதியில் ரத்து செய்யப்பட்ட புல்லட் ரெயில் சேவை ஆனது மீண்டும் தொடங்கப்பட்டு குறிப்பிட்ட நேரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

Related posts: