சிரியாவில் ரஷியா குண்டு மழை – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!

Wednesday, September 5th, 2018

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளில் ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டு மழை பொழிந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக ரஷியா நடத்திவரும் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேறிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் உடனடி போரைத் தவிர்ப்பதற்காக சிரியா அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷியாவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கியும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

எனினும், கிளர்ச்சியாளர்கள் பகுதியைச் சுற்றிலும் அரசுப் படைகள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:இத்லிப் மாகாணத்தில் 22 நாள்களுக்குப் பிறகு ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டுவீச்சில் ஈடுபட்டன.

அந்த மாகாணத்திலுள்ள கிளர்ச்சிப் படையினர் அண்டை மாகாணமான லடாகியாவிலுள்ள சிரியா ராணுவ நிலைகள் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தின. அதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது இத்லிப் மாகாணத்தில் தனது வான்வழித் தாக்குதலை ரஷியா மீண்டும் நடத்தியது.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பெரும்பாலும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹாயத் தஹ்ரீர் அல்-ஷாம் கடுப்பாட்டுப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன.

எனினும், துருக்கியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் ரஷிய விமானங்கள் தாக்குதல் நடத்தின.இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை என்றார் அவர்.

இத்லிப் மாகாணத்தை மீட்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே தனது படைகளை சிரியா அரசு நகர்த்தி வந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிரியாவில், அதிபர் அஸாதின் அரசுக்கு ஆதரவாக ரஷியா கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

லடாகியா மாகாணத்திலுள்ள மெய்மிம் விமான தளத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது. அந்த விமான தளத்தின் மீது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டி வரும் ரஷியா இத்லிப் மாகாணத்திலுள்ள பயங்கரவாத அமைப்பினரை முற்றிலும் அழிப்பதாக சபதமேற்றுள்ளது.

இத்லிப் மாகாணத்திலும் அதனையொட்டியுள்ள கிளர்ச்சியாளர் பகுதிகளிலும் 3 லட்சம் பேர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வசித்து வருபவர்கள் ஆவர்.

இத்லிப் மாகாணத்தில் அதிபர் அல்-அஸாத் கண்மூடித் தனமான தாக்குதலில் ஈடுபடக் கூடாது. அந்தத் தாக்குதலுக்கு ரஷியாவும் ஈரானும் துணைபோய் மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் தவறை செய்யக்கூடாது. அத்தகைய தாக்குதலால் ஆயிரக் கணக்கானோர் பலியாகக் கூடும். அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

Related posts: