சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை – ரஷ்யாவின் அறிவிப்பு!

Wednesday, August 30th, 2023

சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை என ரஷ்யா பிரேஷிலின் விமான போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேஷில் விமான போக்குவரத்து ஆணைக்குழு ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

பிரேஷில் தயாரிப்பான ஜெட் ரக விமானம் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை நடத்தி 2 மாதங்களுக்குள் யெவ்ஜெனி ப்ரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் போவதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினின் இறுதி சடங்குகள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த விமான விபத்துக்கு ரஷ்யாவே காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: