கொரோனாவை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம் – நியூசிலாந்து பிரதமர்!

Saturday, April 11th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தை புரட்டி எடுத்தது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.

இது ஒரு தொற்று நோய், சமூக விலகலால் மட்டுமே இந்த வைரசின் செயின் பரவலை தகர்த்து எறிய முடியும் என சீனாவும், உலக சுகாதார மையமும் எச்சரித்தது.

அப்படி இருந்தும் எந்த நாடுகளும் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் ஜனவரி கடைசி வாரத்தில் ஈரான், துபாய் போன்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.

இதனால் நியூசிலாந்து உஷார் ஆனது. அப்போது இருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வந்தது.

அதாவது ஜனவரில் 22-ல் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை செய்ய ஆரம்பித்தது. ஆனால் அப்போது ஒருவருக்கும் கூட கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தாலும் பரிசோதனையை தொடர்ந்தது.

முதன்முதலாக பிப்ரவரி 26-ந்தேதி முதல் நபர் நியூசிலாந்து மண்ணில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் உஷாரான நியூசிலாந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து தடுப்பு நடவடிக்கைகளில் கையாள தொடங்கியது.

முதலாவதாக மார்ச் 14-ந்தேதியில் இருந்து வெளிநாட்டில் இருந்து யார் நியூசிலாந்துக்கு வந்தாலும் 14 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என உத்தரவிட்டது. மேலும் சொகுசு கப்பல் ஒன்றையும் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது.

அத்துடன் மார்ச் 19-ந்தேதியில் இருந்து நாட்டில் எல்லையை மூடியது. இதனால் மார்ச் 18-ந்தேதி வரை வெளிநாட்டைச் சேர்ந்த 32 பேருக்குத்தான் கொரோனா இருந்தது.

அதன்பின் மின்னல் வேகத்தில் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது. மார்ச் 26-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் 20-ந்தேதி வரை நியூசிலாந்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களின் கடுமையான நடவடிக்கையால் நேற்று வரை 992 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

கடுமையான கட்டுப்பாட்டால் கொரோனா வைரசின் செயின் பரவலை உடைத்து எறிந்து விட்டோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

Related posts: