குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு பிராணவாயுவை வழங்கச் சென்ற கடற்படை அதிகாரி பலி!

Sunday, July 8th, 2018

தாய்லாந்தில் குகையினுள் சிக்கியுள்ள 12 கால்ப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளரை மீட்கும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராண வாயு கொள்கலன்களை குகையினுள் உள்ளவர்களுக்கு வழங்கியதன் பின்னர் வெளியேறிய போது மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் மரணமாகியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மழையுடனான வெள்ளத்தினை அடுத்து அவர்கள் குகையினுள் பிரவேசித்துள்ளனர். அத்துடன் அவர்கள் காணாமல் போயிருந்தனர்.

10 நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய மீட்புப் பணியாளர்கள், காணாமல் போனவர்கள் இருக்கும் பிரதேசத்தை கண்டறிந்தனர்.

இருப்பினும் தற்போது பிராண வாயுவின் மட்டம் குகையினுள் குறைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாதாரணமாக 21 சதவீதத்தில் இருக்கவேண்டிய பிராண வாயு தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக குகையில் உள்ளவர்களை அங்கு வைத்து நீண்ட காலத்திற்கு பேண அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர். எனினும் தாய்லாந்து கடற்படையின் விசேட சுழியோடிகள் அவர்களை துரித கதியில் மீட்பதற்கான திட்டத்தை வகுத்திருந்தனர்.

தற்போது மரணமாகியுள்ள தாய்லாந்து கடற்படை அதிகாரி சேவையில் ஓய்வுபெற்றிருந்தபோதிலும், சிறார்களை மீட்கும் பணிக்காக தாமாக முன்வந்ததாக தாய்லாந்து கடற்படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குகையில் அகப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான பிராண வாயுவை வழங்கும் நோக்கில் 3 மைல் தூரத்திற்கு பிராண வாயு குழாய்களை பொருத்திவருவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: