காதலுக்காக அரச பதவிகளையும் துறக்கும் ஜப்பானிய இளவரசி!

Friday, May 19th, 2017

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, தன் காதலரை மணப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மகோ. இவருடன் படித்தவர் கேய் கொமுரோ. தற்போது கடல் சுற்றுலாத்துறையில் பணிபுரிந்து வருகிறார். நீர் விளையாட்டு, வயலின், சமையல் போன்ற கலைகளில் வல்லவர்.
மகோவும் கொமுரோவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உணவகத்தில் சந்தித்து, வெளிநாட்டில் படிப்பது குறித்துப் பேசினார்கள். அன்று தொடர்ந்த நட்பு, பின்னாட்களில் காதலாக மாறியது.

மகோ ஏற்கனவே தன் குடும்பத்தினரிடம் பேசி, அனுமதி வாங்கிவிட்டார். தற்போது மன்னர் குடும்ப வழக்கப்படி அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அனைவரின் அனுமதியும் கிடைத்த பிறகு, திருமணத்தை அங்கீகரித்து, நிச்சயதார்த்தம் போன்று ஒரு விழா நடத்துவார்கள். பின்னர் திருமணத் திகதி குறிக்கப்பட்டு, மிக விமரிசையாகத் திருமணம் நடக்கும்.

ஆனால், அரச குடும்பத்தைச் சேராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால், மகோ தன்னுடைய இளவரசி ஸ்தானத்தையும் அரச பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டியிருக்கும்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவரைப் போல மகோவும் ஜப்பானின் சாதாரண பிரஜையாகிவிடுவார்.

Related posts: