ஐரோப்பாவை குறிவைத்து 400 பேருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பயிற்சி!

Friday, March 25th, 2016

பிரஸ்ல்ஸ், பாரிஸ் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் தாக்குதல் நடத்தி மிக அதிக அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக 400 பேருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஐரோப்பா, ஈராக் புலனாய்வு துறை மற்றும் பிரான்ஸ் வல்லுநர்கள் இணைந்து ஐஎஸ் அமைப்பினரின் தொடர்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதில், பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. அவற்றில், சிரியா மற்றும் ஈராக்கில் தனி சாம்ராஜ்யம் அமைத்து வந்த ஐஎஸ் படைகள், சமீப காலமாக மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஐரோப்பாவில் தங்கள் இயக்கத்தை காலூன்ற வைக்க ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி பாரிசில் தாக்குதல் நடந்த போதே ஐஎஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பேர் ஐரோப்பாவிற்குள் நுழைந்து விட்டதாகவும், இவர்களே சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அதிக உயிர் சேதம் ஏற்படும் வகையிலான சூழல் அமையும் போதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது பெல்ஜியம் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலின் போது கிடைத்த சிசிடிவி பதிவில் கண்டறியப்பட்டுள்ள 3வது நபர் யார் என்பதை கண்டறிய முடியாததால், அச்சம் அதிகரித்துள்ளது.

இவர்கள் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதாலும், மக்களுடன் கலந்து சாதாரணமான சுற்றுலாப் பயணிகள் போலவோ அல்லது மாணவர்கள் போலவோ சந்தேகம் வராத வகையில் சுற்றி வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்த தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டு, தாங்களே தற்கொலைப் படையாக மாறி தாக்குதலை அரங்கேற்றுவதும் தெரிய வந்துள்ளது.

Related posts: