என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே!… தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உரை!

Tuesday, August 28th, 2018

என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே என்று திமுக தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார்.
திமுகவின் பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுகவின் தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பொதுச் செயலர் க. அன்பழகன் அறிவித்தார்.
தொடர்ந்து பொதுக் குழுவில் திமுகவின் மூத்தத் தலைவர்கள் உரை நிகழ்த்தினர். இறுதியாக கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே! என்று உரையைத் தொடங்கினார் ஸ்டாலின். இதனைக் கேட்ட திமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
மேலும் அவர் ஆற்றிய உரையில், நான் கருணாநிதி இல்லை. அவர் போல பேசவும் தெரியாது. மொழியை ஆளவும் தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன்.
தலைவர் கருணாநிதியின் மகன் என்று சொல்லிக் கொள்வதை விட தொண்டன் என்று சொல்லிக் கொள்ளவே பெருமைப்படுகிறேன். நான் படிப்படியாக வளர வேண்டும் என்றுதான் கருணாநிதியும் விரும்பினார்.
நீங்கள் பார்க்கும் மு.க.ஸ்டாலின் என்பவர் புதியதாக பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். புதிய எதிர்காலத்தை நோக்கி திமுகவையும், தமிழகத்தையும் அழைத்துச் செல்வேன். யார் தவறு செய்தாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போம்.
திமுகவின் பெருங்கனவை தனி மனிதனாக நிறைவேற்ற இயலாது. தொண்டர்களுடன் இணைந்தே செய்ய முடியும். நான் முன்னால் செல்கிறேன், என் பின்னால் நீங்கள் வாருங்கள் என்று அழைக்கவில்லை. நாம் அனைவரும் இணைந்தே செல்வோம் என்று அழைக்கிறேன். இந்த அழைப்பு தென்றலைத் தீண்டுவதற்கு அல்ல, தீயை தாண்டுவதற்கு.
கட்சித் தலைவராவோம் என்று ஒருநாளும் நினைக்கவில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக அனைவரும் இருக்க வேண்டும். எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தலைமை இருக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.

Related posts: