எச்-1 பி விசாவுக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பம்!

Friday, April 15th, 2016
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வழங்கக்கூடிய எச்-1 பி விசாவுக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன.  அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.

இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.   ஆனால் இந்த விசா, அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக கூறி, அதை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்றும், நான் அமெரிக்க ஜனாதிபதியானால், அதை செய்வேன் என்றும் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த நிலையில், 2017-ம் நிதி ஆண்டுக்கான ‘எச்-1 பி விசா’ விண்ணப்பங்களை அமெரிக்கா ஏப்ரல் 1-ந் திகதி முதல் ஏற்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

65 ஆயிரம் ‘எச்-1 பி விசா’ வழங்குவதற்கு இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.   ஆனால் 5 நாட்களிலேயே ‘எச்-1 பி விசா’ வுக்காக 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்து விட்டன. அதாவது தேவைக்கும் 3 மடங்கு அதிகமாக குவிந்து விட்டன.  மேலும், அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிற 20 ஆயிரம் ‘எச்-1 பி விசா’ வுக்கும் தேவைக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

தேவைக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் யார், யாருக்கு ‘எச்-1 பி விசா’ வழங்குவது என்பதை தீர்மானிப்பதற்காக விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, குலுக்கலும் நடைபெற்று முடிந்துள்ளது.  முதலில் அமெரிக்காவில் முது நிலை பட்டம் முடித்தவர்களுக்கான 20 ஆயிரம் விசாக்களுக்கும் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.  அந்த வகையில் பெறப்பட்ட மீதி விண்ணப்பங்களும் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டு, 65 ஆயிரம் பேருக்கான விசாக்களுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் விசா விண்ணப்பங்கள் அவர்கள் செலுத்திய கட்டணத்துடன் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: