உலக சுகாதார அமைபிற்கான நிதி வழங்கலை நிறுத்துகின்றது அமெரிக்கா!

Wednesday, April 15th, 2020

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாக அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு பல மில்லியன் டொலர்கள்  நிதி பெறும் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்ததால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்நிலையில், வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தான் அதிக நிதி வழங்குகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 400 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: