ஆப்கானில் தொடர் தாக்குதல்: 23 பேர் பலி!

Tuesday, June 21st, 2016

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுக்கடுக்கான 3 வெடி குண்டு தாக்குதலில் நேபாள பாதுகாப்பு படையினர் உட்பட 23 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

ஆப்கான் தலைநகர் காபூலில் சிற்றூந்து ஒன்றின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததில் 14 நேபாள பாதுகாப்பு படையினர் உடல் சிதறி கொல்லப்பட்டனர். கால்நடையாக வந்த அந்த மர்ம நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதில் கனேடிய தூதரகத்தில் பணிபுரியும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்துள்ள கூட்டுப்படைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட எச்சரிக்கை இதுவென அறிவித்துள்ளனர்.இதனிடையே, காபூலின் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேறொரு அரசியல்வாதிக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பதக்ஷான் பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

ரமழான் நோம்பு துவங்கியதன் பின்னர் நிகழ்த்தப்படும் முதல் தாக்குதல் பேருந்து மீதானது என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. தாக்குதலை அடுத்து அப்பகுதிக்கு 24 அவசர உதவிக்குழுக்களை அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடைசியாக கடந்த ஏப்ரல் 19ம் திகதி நடந்த தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர் 340க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

Related posts: