அமெரிக்க படைகளை வெளியேற்றும் எண்ணம் இல்லை: தென் கொரியா!

Thursday, May 3rd, 2018

வட கொரியாவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், தென் கொரியாவில் இருந்து அமெரிக்க படைகள் திருப்பி அனுப்பப்படும் என்று வெளியாகும் தகவல்களுக்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜே-இன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் அமெரிக்க படைகள் தங்கியிருப்பது என்பது இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு சார்ந்த விஷயம். இதற்கும், அமைதி ஒப்பந்தத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் கூறினார்.

தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடந்த 1950-களில் இருந்து பகை நீடித்து வந்தது. அவ்வபோது போர் பதற்றமும் வந்து போனது. இதற்கிடையே, கூட்டு ராணுவப் பயிற்சிக்காக அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக தென் கொரியாவில் முகாமிட்டுள்ளன. இது வடகொரியாவுக்கான மறைமுக எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அண்மையில் தென் கொரியா சென்று அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்-ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையேயான 65 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தென் கொரிய அதிபரின் ஆலோசகர் மூன் சங் இன், அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில், வட கொரியாவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால், அமெரிக்க ராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் வான்படையினர் ஆகியோர் தென் கொரியாவில் தங்கியிருப்பது கேள்விக்குறியதாக ஆகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசி இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என அந்த ஆலோசகரை அதிபர் அலுவலகம் கடுமையாக எச்சரித்தது என தென் கொரிய அரசின் செய்தித்தொடர்பாளர் கிம் உய் கியோம் தெரிவித்தார்.

இதனிடையே சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, அரசு முறைப் பயணமாக புதன்கிழமை வட கொரியா சென்றடைந்தார். இதன்போது அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரீ யோங் ஹோ-வை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பின்னர், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐயும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர். இதற்கான நேரம், இடம் உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Related posts: