அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா!

Saturday, July 24th, 2021

அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தடைகள் ஹொங்கொங்கின் வணிகச் சூழலை ஆதாரமற்ற முறையில் அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இத்தடைகள் சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கடுமையாக மீறுகின்றன என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

000

Related posts: