அமெரிக்கா–தென்கொரியா போர் ஒத்திகை ஆரம்பம்: அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா மீண்டும் மிரட்டல்!

Tuesday, March 8th, 2016
கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா– தென்கொரியா ராணுவ வீரர்களின் போர் ஒத்திகை ஆரம்பமாகியுள்ளது. எங்களை தாக்கினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம் என்று வடகொரியா மீண்டும் மிரட்டல் விடுத்தது.
தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் எச்சரிக்கையையும் மீறி அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 4–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதேபோல் கடந்த மாதம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணையை செலுத்தி பரிசோதனை செய்தது.
அணுகுண்டு சோதனைகளை நடத்தியதற்காக ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டின் மீது மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் படைகளை குவித்து வருகிறார். தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தென் கொரியாவுக்கு பக்கபலமாக உள்ள அமெரிக்காவும், பதிலடி கொடுக்கும் விதமாக தனது படைகளை கொரிய தீபகற்ப பகுதியில் கூடுதலாக நிறுத்தி வைத்து உள்ளது.
மேலும், தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து போர் ஒத்திகையையும் நேற்று அமெரிக்கா தொடங்கியது. இந்த ஒத்திகையில், 3 லட்சம் தென்கொரிய வீரர்களும், 17 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினரும் ஈடுபட்டு உள்ளனர். வடகொரியா தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பயிற்சி நடக்கிறது. இதில் இரு நாடுகளின் கடற்படை மற்றும் விமானப்படையும் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் இந்த செயலால் வடகொரியா எரிச்சல் அடைந்தது.
போர் ஒத்திகை தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக வடகொரியா தேசிய ராணுவ கமிஷன் மீண்டும் ஒரு மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டது.
அதில் ‘அமெரிக்கா–தென்கொரியாவின் போர் ஒத்திகையை வடகொரியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அணு ஆயுதபோர் பயிற்சியாகவே கருதுகிறோம். இந்த ஒத்திகை வடகொரியாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது. எத்தகைய தாக்குதல் நடத்தினாலும் அதை சந்திக்க வடகொரியா தயாராகவே இருக்கிறது. முன்கூட்டிய அணு ஆயுத தாக்குதலுக்கும் வடகொரியா தயார் நிலையில் உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது.

Related posts: