அமெரிக்காவுடனான எந்தவொரு இராணுவ மோதலுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு!

Friday, July 29th, 2022

அமெரிக்காவுடனான “எந்தவொரு இராணுவ மோதலுக்கும் நாடு முழுமையாக தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஏழாவது அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளமைக்கு மத்தியில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

வடகொரியத் தலைநகர் யொங்பியோங்கில் நடைபெற்ற கொரிய யுத்தத்தின் ஆண்டு நிறைவு விழா, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

1950 ஆம் ஆண்டுமுதல் 1953 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த யுத்தத்தில் அமெரிக்காவை வெற்றிகொண்டதாக வடகொரியா கூறிவருகின்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் யொங்பியோங்கில் இராணுவ அணிவகுப்புகள், வாண வேடிக்கைகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய கிம் ஜோங் உன், அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் காரணமாக, தற்காற்பை உறுதி செய்யும் வரலாற்றுப் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக கூறியுள்ளார்.

வடகொரியாவின் வழக்கமான இராணுவ பயிற்சிகளை ஆத்திரமூட்டும் செயற்பாடு என அமெரிக்கா தவறாக சித்தரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனடி மோதல் ஏற்படும் பட்சத்தில் வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஒரு திட்டமாக முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதன் மூலம், தென் கொரியா செயற்படத் திட்டமிட்டுள்ளதாக கிம் ஜோன் உன் கூறியுள்ளார். இதற்கு அமெரிக்கா இதுவரை பதில் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை.

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் முன்கூட்டிய தாக்குதலை நடத்தினால், அவரின் அரசாங்கமும் இராணுவமும் “அழிக்கப்படும் எனவும் வடகொரிய அதிபர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணு ஆயுத மோதலின் அதிகரித்துவரும் அபாயம் குறித்து பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் லவ்க்ரோவ் எச்சரித்துள்ளார்.

பனிப்போர் காலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவிய தகவல் தொடர்பாடல்களின் செயலிழப்பானது இந்த ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மூலோபாய அபாயங்கள் பரந்துபட்ட அளவில் காணப்படும் சந்தர்ப்பத்தில் பேச்சுக்களை நடத்துவதிலும் குறைபாடுகள் காணப்படுவதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் போட்டிகளும் மோதல்களுக்கான அதிகமான வழிகளை ஏற்படுத்துவதாகவும் ஸ்டீபன் லவ்க்ரோவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: