அமெரிக்கக் குடியேற்றக் கொள்கையில் மாற்றம்!

Saturday, November 12th, 2016

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையில் அடுத்ததாக அமையவிருக்கும் அரசில் தற்போதுள்ள குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளை கவனிக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

டிரம்ப் தலைமையிலான புதிய அரசில், மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவது,குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு நுழைவு இசைவு சீட்டு (விசா) வழங்க மறுப்பது,குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.மதவெறி சித்தாங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், அணு ஆயுதங்கள், இணையதளத் தாக்குதல் ஆகிய மூன்று விவகாரங்களுக்கு டிரம்ப் அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

குடியேற்றக் கொள்கைகளைப் பொறுத்தவரை, 10 அம்சத் திட்டங்களை உருவாக்கி, விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.தேர்தல் பிரசாரத்தின்போது குடியேற்ற விதிகள் குறித்து டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நாட்டின் தெற்கு எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது மட்டுமின்றி, எல்லை தாண்டி அத்துமீறி நுழைபவர்களைக் கைது செய்து உடனடியாக விடுவித்து விடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

மேலும், குற்றச் செயல் புரியும் குடியேற்ற வாசிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வது,குடியேற்ற வாசிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பகுதிகளுக்கு நிதியுதவியை ரத்து செய்வது,குடியேற்ற விதிகளை மிகக் கடுமையாக செயல்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.அமெரிக்காவுக்கு வரும் நபர்களின் பின்னணி குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நாடுகளிலிருந்து, யாருக்கும் நுழைவு இசைவு வழங்குவதைத் தடைசெய்வது,

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பும்போது அவர்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வது ஆகியவை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.சட்டத்துக்குட்பட்ட குடியேற்ற முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம் என்று டிரம்ப்பின் ஆட்சி மாற்றக் குழுவினர் தெரிவித்தனர்.

_92400878_gettyimages-622161588

Related posts: