அணு ஆயுதத்தை ஒழிக்க உறுதிகொண்ட  தலைவர்கள் !

Wednesday, June 13th, 2018

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் – வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு, சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபருடனான சந்திப்பு, நேர்மையான, நேரடியான, ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – வட கொரியா இடையே, பல ஆண்டுகளாக பனிப் போர் நடந்து வந்த நிலையில், இரு நாட்டு அதிபர்களும் நேற்று, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின், சென்டோசா தீவில் உள்ள கேபல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து முக்கிய பேச்சு நடத்தினர்.

இரு தலைவர்களிடையிலான சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு, வட கொரிய அதிபர், கிம் ஜாங், 34, முதலில் வந்தார். அவர் வந்த, ஏழு நிமிடங்கள் கழித்தே, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், 71, அங்கு வந்தார்.

மகிழ்ச்சி –

வட கொரிய வழக்கப்படி, வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், டிரம்ப் வருகைக்கு முன்பே, கிம் ஜாங் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே போல், வட கொரிய மக்களுக்கு பிடித்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிவப்பு நிறத்தில், ‘டை’ அணிந்திருந்தார். இருவரும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, ”அணு ஆயுத பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள் தானே,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிடம், மூன்று முறை கேள்வி எழுப்பினார். அதற்கு, வாய் திறந்து பதில் கூறாத கிம் ஜாங், சிரித்தபடி இருந்தார்.

இந்த சந்திப்பின் போது, இருவரின் மொழிபெயர்ப்பாளர்கள் தவிர, வேறு யாரும் அவர்களுடன் இல்லை.

முதல் சந்திப்பின் போது, இருவரும், 12 வினாடிகள் கை குலுக்கினர். உலக நாடுகளிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அமெரிக்க – வட கொரிய அதிபர்களிடையிலான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபர், கிம் ஜாங் உடனான சந்திப்புக்குப் பின், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாதுகாப்பு :

வட கொரிய அதிபருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கொரிய பிராந்தியத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, கிம் ஜாங் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே, ஒரு மிகப் பெரிய அணு ஆயுத சோதனை கூடத்தை, வட கொரியா மூடியுள்ளதாக, அவர் என்னிடம் தெரிவித்தார். அவரது இந்த முடிவை, அமெரிக்கா ஆதரிக்கிறது. வட கொரியாவுக்கு அனைத்து வகையிலும், பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

வட கொரிய பொருளாதார முன்னேற்றத்தை பற்றி, அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனினும், கிம் ஜாங் உறுதியளித்த நடவடிக்கைகளின் போக்குக்கு ஏற்ப, அவர்களுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும். இளம் தலைவரான கிம் ஜாங், மிகச் சிறந்த புத்திசாலி. அவரிடம் அதிக திறமை உள்ளது. சரியான நேரத்தில், அவருக்கு, வெள்ளை மாளிகை வரும்படி அழைப்பு விடுக்கப்படும்.

அணு ஆயுத கொள்கை குறித்து, தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமும், அமெரிக்கா பேச்சு நடத்தும். கிம் ஜாங் உடனான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட, மிகச் சிறப்பாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் குறித்து, இருவரும் முக்கிய பேச்சு நடத்தினோம். அதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், கிம் ஜாங் பேசியதவாது: இரு நாடுகளிடையே இருந்த, பழைய, கசப்பான நிகழ்வுகளை மறந்து, புதிய பயணத்திற்கு பாதை வகுத்துள்ளோம். இந்த உலகம், விரைவில் மிகப் பெரிய மாற்றத்தை காண உள்ளது

ஏராளமான தடைகளையும், சோதனைகளையும் கடந்து, வட கொரியா, இன்றைய நிலையை அடைந்துள்ளது.

அதிபர் டிரம்புடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு, அமைதிக்கு வழி வகுக்கும். எதிர் காலத்தில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு தலைவர்களிடையே, 45 நிமிடங்கள் பேச்சு நடந்தது. அதன் பின், இருவரும் விருந்து சாப்பிட்டனர். அதில், மேற்கு ஆசிய மற்றும் கொரிய வகை உணவுகளும் இடம் பெற்றிருந்தன. மதிய விருந்துக்குப் பின், இரு தலைவர்களும், ஒருவருடன் ஒருவர் பேசியபடி, சற்று நேரம் உலாவினர்.

இரு நாட்டு சிறைகளில் இருக்கும் போர் குற்றவாளிகளை, அவரவர் நாடுகளுக்கு பரிமாறிக்கொள்வது, கைதிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தினர்.

இரு நாட்டு தலைவர்களிடையேயான அடுத்த சந்திப்பை, அமெரிக்கா அல்லது வட கொரியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சுற்று பேச்சுகளில், முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள், முற்றிலும் விலக்கப்படும் என, தகவல் வெளியாகிஉள்ளது.

இந்தியா வரவேற்பு!

அமெரிக்கா – வட கொரியா அதிபர்கள் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை, இந்தியா வரவேற்றுள்ளது. இது, கொரிய பிராந்தியத்தில், அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா – வட கொரியா அதிபர்கள், நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை, இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம், கொரிய கடல் வழிப் பாதையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என நம்பலாம். அமைதி வழியை இந்தியா எப்போதும் ஆதரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுத பயன்பாடு நிறுத்தம் குறித்த, கிம் ஜாங்கின் முடிவுக்கு, சீனாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

துாக்கம் போச்சு!

”டிரம்ப் – கிம் ஜாங் இடையிலான பேச்சு எப்படி அமையுமோ என எண்ணி, சில நாட்களாக எனக்கு உறக்கம் போய்விட்டது. இரு நாட்டு தலைவர்களிடையிலான பேச்சு, நல்ல வகையில் முடிய வேண்டும் என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவதாக கூறியுள்ள, கிம் ஜாங்கின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், வட, தென் கொரியாவில் அமைதியான சூழல் நிலவும்” -மூன் ஜேயின், தென் கொரிய அதிபர்

Related posts: