அணு ஆயுதங்களை கைவிடுவதால் அச்சுறுத்தல் – வடகொரியா!

Sunday, June 3rd, 2018

அணு ஆயுதங்களை கைவிடுவதால் எங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என வாஷிங்டனில் வடகொரிய துாதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

எலியும், பூனையுமாக இருந்த அமெரிக்காவும் வடகொரியாவும் இணக்கமான சூழ்நிலைக்கு வந்துள்ளன. இரு அதிபர்களும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னின் வலது கரமாக கருதப்படும் முன்னாள் உளவுத்துறை தலைவர் கிம்யோங் சோல் தற்போது வாஷிங்டன் வந்துள்ளார்.

அவரது தலைமையிலான குழு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்பாம்பியோ வை சந்தித்து பேசியது. அணு சோதனை நிலைஅப்போது அணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சோதனை மையங்களை தகர்த்தது குறித்த ஆவணங்களை வட கொரிய குழு அமெரிக்க குழுவிடம் அளித்தது.

மேலும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு முறைப்படி வட கொரிய அதிபர் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தது. வடகொரிய துாதுக்குழுவுடனான பேச்சுவார்த்தை குறித்து மைக்பாம்பியோ கூறும்போது, பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. அதிபர்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அணு ஆயுதங்களை கைவிடுவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதை கவனமுடன் பரிசீலிப்போம். அமைதியான உலகமே எங்கள் இலக்கு, என்றார். அதிபர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரு தரப்பு பிரதிநிதிகளும் நியூயார்க், சிங்கப்பூர் மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள அமைதிமையம் ஆகியவற்றில் சந்தித்து பேச உள்ளனர். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிம்ஜோங் உன் அளித்துள்ள கடிதம் இன்று என் கைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் என அறிய ஆவலாய் உள்ளேன். பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12ல் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரே கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது.

அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். உலக மக்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் கிடைக்கும், என குறிப்பிட்டுள்ளார்.சிங்கப்பூரில் ஆலோசனை அதிபர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஜோ ஹேகின் சிங்கப்பூரில் உள்ளார்.

கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள அமைதி மையத்தில் அமெரிக்க துாதர் சுங்க் கிம் தலைமையிலான குழு ஏற்பாடுகளை செய்து வருகிறது.வடகொரிய குழு தலைவர் கூறும்போது, எங்கள் தரப்பின் வெளிப்படை தன்மையை அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கினோம். அணு ஆயுதங்களை கைவிடுவதால் எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதையும் எடுத்துரைத்தோம், என்றனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுகையில், வடகொரியாவுக்கு தேவையான முழு பாதுகாப்பை அமெரிக்கா வழங்கும். பொருளாதார ரீதியிலான உதவிகளும் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதிபர்களின் பேச்சுவார்த்தைக்குப்பிறகு வெளியிடப்படும் கூட்டறிக்கையில் இதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கும், என்றனர்.

இந்நிலையில், வடகொரியா-தென்கொரியா இடையே புதிய அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கொரிய எல்லையில் உள்ள அமைதி மையத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் தென்கொரியா சார்பில் அமைச்சர் சோமைன்க்யூயான், வட கொரியா சார்பில் ரீசன்க்வான் கையெழுத்திட்டனர். அணு ஆயுத ஒழிப்பில் மிக முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. அமெரிக்காவின் வற்புறுத்தலால் தான் வடகொரியா இந்த ஒப்பந்ததை ஏற்படுத்தியதாக உலக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: