101 வயது இந்திய மூதாட்டிக்கு 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம்!

Wednesday, April 26th, 2017

நியூசிலாந்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில், 101 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த மான் கவுர் எனும் மூதாட்டி 74 நொடிகளில் தூரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆக்லாந்தில் ‘வேர்ல்ட் மாஸ்டர்ஸ்’ என்ற பெயரில் முதியோர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில், 101 வயதான மான் கவுருடன் போட்டியிட யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், போட்டி அமைப்பாளர்கள் அவர் ஓடுவதற்கு சம்மதித்தனர்.

தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் மான் கவுர்.இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் (74 நொடிகளில்) கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

அவரது மகனுடன் சேர்ந்து ஏராளமான தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.100 மீட்டர் ஓட்டத்தைத் தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் தான் பெற்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளார்.93 வயது வரை மான் கவுர் தடகளத்தில் கலந்து கொண்டது கிடையாது, அவரது மகன் குர்தேவ் சிங், வேர்ல்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினார். இதனடிப்படையில்தான் தடகளத்தில் பங்கேற்று வருகிறார் கவுர்.

முதிய வயதில் தடகளப்போட்டியில் பங்கேற்று வரும் கவுர் இதோடு 17 ஆவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.இம்முறை வேர்ல்ட் மாஸ்டர்ஸ் போட்டிகளில் மொத்தம் 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

 

Related posts: