1000-ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து: ஐசிசி வாழ்த்து!

Tuesday, July 31st, 2018

பர்மிங்ஹாம் எட்பாகஸ்டனில் இந்தியாவுடன் விளையாடும் முதல் டெஸ்ட் ஆட்டம், இங்கிலாந்து அணி விளையாடும் 1000-ஆவது டெஸ்ட் ஆட்டமாகும். இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாழ்த்து தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டத்தின் பிறப்பிடமாக இங்கிலாந்து கருதப்படுகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா என போற்றப்படுகிறது.

கடந்த 1877-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி விளையாடியது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 999 டெஸ்ட் ஆட்டங்களில் 357-இல் வெற்றியும், 297-இல் தோல்வியும் பெற்று, 345 டெஸ்ட்களில் டிரா கண்டுள்ளது. எட்பாகஸ்டனில் மட்டும் 50 ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து 27-இல் வெற்றியும், 8-இல் தோல்வியும், 15-இல் டிராவும் கண்டுள்ளது.

இந்திய அணி 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எட்பாகஸ்டனில் நடைபெறும் போட்டி தான் இங்கிலாந்து அணியின் 1000-ஆவது ஆட்டமாகும். இதன் மூலம் கிரிக்கெட் உலகிலேயே 1000-ஆவது டெஸ்டில் விளையாடும் முதல் நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் இச்சாதனைக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஷசாங்க் மனோகர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இத்தகைய பெருமையை பெறும் முதல் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. இதற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் சமுதாயம் சார்பிலும், ஐசிசி சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க இந்த 1000-ஆவது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியை பாராட்டுகிறேன். கிரிக்கெட் ஆட்டத்திலே மிகவும் பழமையானதாக டெஸ்ட் ஆட்டம் திகழ்கிறது.

இதை கெளரவிக்கும் வகையில் ஐசிசி நடுவர்கள் எலைட் குழு உறுப்பினர் ஜெப் குரோவ், ஐசிசி சார்பில் இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் காலின் கிரேவ்ஸ்க்கு வெள்ளி பட்டயம் ஒன்றை வழங்குவார்.

இந்தியாவுடன் கடந்த 1932 ஜூன் மாதம் முதல் டெஸ்டில் இங்கிலாந்து மோதியது. மொத்தம் 117 ஆட்டங்களில் 43-இல் வெற்றியும், 25-இல் தோல்வியும் கண்டுள்ளது. உள்ளூரில் இங்கிலாந்து 30 ஆட்டங்களில் வெற்றியும், இந்தியா 6-இல் வெற்றியும் பெற்றன. மீதம் 21 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. எட்பாகஸ்டனில் நடந்த 6 ஆட்டங்களில் இங்கிலாந்து 5-இல் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: