10 அணிகளுக்குக் கிடைத்த முதற்தங்கம்!

Wednesday, August 24th, 2016

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னத்தில் காணப்படும் 5 வளையங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 கண்டங்களையும் சேர்ந்த நாடுகள், தங்கள் முதற்தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டன. இவ்வாறு, 9 நாடுகளுக்கும் சுயாதீன ஒலிம்பிக் அணிக்கும் முதற்தங்கம் கிடைத்தது.

பஹ்ரைனைச் சேர்ந்த றுத் ஜெபெட், பெண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டல் குதிரை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று, ஒலிம்பிக் வரலாற்றில் பஹ்ரைனுக்கான முதலாவது தங்கத்தை வென்று கொடுத்தார். 9ஆவது தடவையாக ஒலிம்பிக் பங்குபற்றிய பஹ்ரைனுக்கு, கென்யாவில் பிறந்த றுத் ஜெபெட்டே, முதலாவது தங்கத்தைப் பெற்றுக்கொடுத்தமை விசேட அம்சமாகும்.

இம்முறையோடு 14 தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய ஃபிஜி அணி, இம்முறையே முதலாவது தங்கத்தைப் பெற்றது. ஆண்களுக்கான எழுவர் கொண்ட றக்பிப் போட்டிகளிலேயே அவ்வணிக்குத் தங்கம் கிடைத்தது.

ஐவரி கோஸ்ட் அணியின் செய்க் சாலா ஜூனியர் சிஸே, 80 கிலோகிராம் டைக்குவாண்டோ போட்டிகளில் தங்கம் வென்று, 14ஆவது தடவையாக ஒலிம்பிக் தொடரில் பங்குபற்றிய ஐவரி கோஸ்டுக்கு முதலாவது தங்கத்தைக் கொடுத்தார்.

ஆண்களுக்கான 68 கிலோகிரோம் டைக்குவாண்டோ போட்டிகளில் பங்குபற்றிய ஜோர்டானின் அஹ்மட் அபுகாஷ், தங்கம் வென்று, தனது நாட்டுக்கு முதலாவது தங்கத்தைக் கொடுத்தார். 10ஆவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாடு பங்குபற்றியது.

கொஸோவோவைச் சேர்ந்த மஜ்லின்டா கெல்மென்டி, பெண்களுக்கான ஜூடோவில் வென்று, தனது நாடு முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய தொடரிலேயே தங்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

18ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய புவர்ட்டோ றிக்கோ, தனது முதலாவது தங்கத்தை, பெண்கள் டென்னிஸ் போட்டிகளில் மோனிக்கா புய்க் வென்ற தங்கம் மூலம் பெற்றுக் கொண்டது.

16ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய சிங்கப்பூர், ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சலில் ஜோசெப் ஸ்கூலிங் வென்ற தங்கம் மூலம், முதலாவது தங்கத்தைப் பெற்றது. தனது கதாநாயகனான அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸைத் தோற்கடித்தே, இந்தத் தங்கத்தை ஸ்கூலிங் வென்றிருந்தார்.

தஜிகிஸ்தான் அணி, 6ஆவது தடவையாக ஒலிம்பிக் பங்குபற்றிய போதிலும், ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் டில்ஷோட் நஸரோவ் வென்ற தங்கம் மூலமாகவே, தனது முதலாவது தங்கத்தை வென்றது.

15ஆவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வியட்னாம் அணி, 10 மீற்றர் காற்றுத் துப்பாக்கி சுடுதலில் ஹொங் ஸூவான் வின்ஹ் பெற்ற தங்கம் மூலம், தனது முதலாவது தங்கத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்த 9 நாடுகள் தவிர, சுயாதீன ஒலிம்பிக் அணி, தனது முதலாவது தங்கத்தைப் பெற்றுக் கொண்டது. 1992, 2000, 2012 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளிலும் சுயாதீன அணி களமிறங்கிய போதிலும், இம்முறை அவ்வணி சார்பாகக் களமிறங்கிய குவைத் அணியின் ‡பெஹையடமட லெட தீஹானி வென்ற தங்கமே, அதன் முதலாவது தங்கமாக அமைந்தது.

Related posts: