ரவிசாஸ்திரியின் கருத்து முட்டாள்தனமானது – இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சாளர்!

Tuesday, March 5th, 2019

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை 4ஆம் நிலையில் களமிறக்க முடிவெடுப்போம் என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறிய கருத்து முட்டாள்தனமானது என முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உலகக் கிண்ணத் தொடரில் சூழ்நிலைமைகள் தீர்மானித்தால் விராட் கோஹ்லியை களமிறக்க முடிவெடுப்போம் என்று கூறிய கருத்துக்கு கோஹ்லியும் சம்மதம் தெரிவித்தார்.

இதற்கு காரணம், டோனி 4ஆம் நிலையில் களமிறங்கினால் பெரிய இலக்குகளை விரட்ட முடியாது. கோஹ்லி அந்த நிலையில் இறங்கினால், பெரிய இலக்குகளை விரட்ட சவுகரியமாக இருப்பதுடன், கடைசி ஓவர் வரை கொண்டு செல்லாமல் முன்னதாகவே வெற்றி பெற்று விடலாம் என்று கூறப்படுவது தான்.

எனினும், 3ஆம் நிலையில் களமிறங்கிய கோஹ்லி 8,000க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளதுடன், 32 சதங்களையும் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 39 சதங்களை அடித்துள்ளார். ஆனால், 4ஆம் நிலையில் 1,744 ஓட்டங்களையே எடுத்தாலும் 58 ஓட்டங்கள் என்ற சராசரியை வைத்துள்ளார்.

இந்நிலையில், கோஹ்லி பெரிய இலக்குகளை விரட்டுவதில் வல்லவர். உண்மையில் பெரிய இலக்குகளை விரட்டிவதில் பினிஷர் என்றால் அது கோஹ்லி தான் என்று பலரும் கருத்து கூறி வரும் நிலையில், ரவிசாஸ்திரியின் இந்த யோசனைக்கு அகர்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அகர்கர் கூறுகையில், ‘எண்கள் கூறுவதை சிந்தியுங்கள், 32 சதங்கள் 3ஆம் நிலையில் இறங்கி எடுத்துள்ளார் விராட் கோஹ்லி. 4ஆம் நிலையிலும் எண்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், 4ஆம் நிலையில் கோஹ்லி இறங்கக் கூடாது.

ஒரு துடுப்பாட்ட வீரர் தன் வாழ்நாளின் சாதனைகளையெல்லாம் ஒன் டவுனில் இறங்கி செய்துள்ளார். அவரது மகத்துவமே இந்த டவுனில்தான் வந்துள்ளது. ஆகவே இவரைப் போய் இன்னும் கீழே இறங்கச் சொல்வது சரியல்ல. 4வது நிலையிலும் அவர் திறம்பட ஆடலாம்.

ஆனால், ஏற்கனவே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் டவுனிலிருந்து இன்னும் கீழே இறக்குவது முட்டாள்தனமானது. முதல் 3 வீரர்களின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துள்ளது, மிடில் ஆர்டர்தான் கவலையளிப்பதாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Related posts: