பாகிஸ்தான் வீரரை கட்டியணைத்து பாராட்டிய கோலி!

Monday, October 25th, 2021

போட்டி முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் மொகமட் ரிஸ்வானை, கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

துபாயில் நேற்று நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும், 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது. இச்சூழலில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

இதற்கிடையில் ஆட்டம் முடிந்ததும், மைதானத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகம்மது ரிஸ்வானை இந்திய கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் கோலியிடம் வர, மூவரும் சிறிதுநேரம் பேசினர். கோலி அவர்களிடம் மகிழ்ச்சிப்பொங்க பேசி,வாழ்த்துக்கூறி விட்டுச் சென்றார். மேலும் தோனியும் களத்துக்கு வந்து பாகிஸ்தான் வீரர்களுடன் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பரம எதிரிகளாக வர்ணிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று களத்தில் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தியது, ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது

000

Related posts: