பரகுவேயிடம் தோற்றது ஆர்ஜென்டீனா!

Thursday, October 13th, 2016

ரஷ்யாவில், 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண எதைபந்தாட்டத்துக்கான தகுதிகாண் போட்டியில், குட்டி அணியான பராகுவேயிடம், மெஸ்ஸி இல்லாத ஆர்ஜென்டீனா அணி தோல்வியடைந்தது.

பராகுவேயிடம், 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ஆர்ஜென்டீனா அணி, தகுதிகாண் போட்டிகளில், தென்னமெரிக்க அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசையில், முதலாமிடத்திலிருந்து, ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. அடுத்த சுற்றுப் போட்டிகளில், பிரேஸிலை, ஆர்ஜென்டீனா எதிர்கொள்கிறது. தென்னமெரிக்காவிலிருந்து நான்கு அணிகளே உலகக் கின்னத்துக்கு தெரிவாவதுடன், ஐந்தாவது அணி, ஓஷானியப் பிரதேச அணியுடன் தகுதிகாண் போட்டியில் விளையாட வேண்டியிருக்கும்.

பிரேஸில், வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில், பிரேஸில் வெற்றி பெற்றது. பிரேஸில் சார்பாக, கப்ரியல் ஜீஸஸ், வில்லியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். இப்போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம், தகுதிகாண் போட்டிகளில், தென்னமெரிக்க அணிகளுக்கிடையிலான புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இதேவேளை, கொலம்பியா, உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியில், கொலம்பியா, உருகுவே அணிகளது நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியான் ரொட்ரிகாஸ், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இது தவிர, பெருவை, 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற சிலி, நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெல்ல முடியாத நிலையை மாற்றிக் கொண்டது. சிலி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அர்டுரோ விடால் பெற்றிருந்தார்.

ஐரோப்பா பகுதிக்கான தகுதிகாண் போட்டிகளில், தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனி, 2-0 என்ற கோல் கணக்கில் வட அயர்லாந்தை தோற்கடித்திருந்தது. ஜேர்மனி சார்பாக, ஜூலியான் ட்ரெக்ஸ்லர், சமி கெடிரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஏனைய போட்டிகளில், இங்கிலாந்து, ஸ்லோவேனியா அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்காத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்த்திருந்தது. இப்போட்டியை இங்கிலாந்து அணி சமநிலையில் முடித்துக் கொள்வதற்கு, இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோ ஹார்ட் மேற்கொண்ட  அபாரமான தடுப்புகளே காரணமாக அமைந்தன.

இந்த நிலையில், உலகின் இரண்டாவது இளம் நாடான மொன்ரனீக்ரோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் தோல்வியடைந்திருந்தது. ஏனைய போட்டிகளில், ஆர்மேனியாவை, 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றதுடன், செக்.குடியரசு, அஸார்பைஜான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. ‌

ஆசியப் பகுதிக்கான தகுதிகாண் போட்டிகளில், தென்கொரியாவை, 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் வென்றதுடன், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

FBL-WC-2018-ARG-PAR

Related posts: