பங்களதேஷ் பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை!

Thursday, May 4th, 2017

பங்காளதேஷில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ஓட்டங்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.

ஆக்சியம் கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லால்மதியா கிளப் பந்து வீச்சாளர் சுஜோன் முகமது 4 பந்தில் மொத்தம் 92 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 15 நோ-பால்களையும், 13 வைடுகளையும் அவர் வீசியதும் அடங்கும். இவை அனைத்தும் பவுண்டரிக்கும் ஓடியது. விக்கெட் காப்பாளர் எந்த பந்தையும் பிடிக்கவில்லை. நடுவரின் ஒரு தலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டது தெரிய வந்தது.

இதே போல் நடுவருக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக பியர் பைட்டர்ஸ் ஸ்போர்ட்டிங் கிளப் பந்துவீச்சாளர் தஸ்னிம் ஹசன் ஒரு ஆட்டத்தில் உதிரிகளை அள்ளி தெளித்ததோடு, 7 பந்தில் 69 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பங்காளதேஷ் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பந்து வீச்சாளர்கள் சுஜோன் முகமது, தஸ்னிம் ஹசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகளும், அவர்களது அணியின் தலைவர், பயிற்சியாளர், மேலாளர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விரு கிளப்புகளுக்கும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க காலவரையின்றி தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பந்துவீச்சாளர் அணி நிர்வாகம் உத்தரவு இன்றி இவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அணிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்திருப்பதாக பங்காளதேஷ் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Related posts: