நடப்பு சம்பியன் இங்கிலாந்தை அதிரவைத்து 69 ஓட்டங்களால் வெற்றீயீட்டி வரலாறு வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்,!

Monday, October 16th, 2023

டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது லீக் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான், நடப்பு சம்பியன் இங்கிலாந்தை அதிரவைத்து 69 ஓட்டங்களால் வெற்றீயீட்டி வரலாறு படைத்தது.

அப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தை வெற்றிகொண்டது.

ஆரம்ப வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ், மத்திய வரிசை வீரர் இக்ரம் அலிகில் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், முஜிப் உர் ரஹ்மான், ராஷித் கான் ஆகியோர் பதிவுசெய்த 3 விக்கெட் குவியல்கள் ஆப்கானிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

அப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பின்னர் களத்தடுப்பை தெரிவுசெய்தது குறித்து வருத்தப்படுவதாக தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர், போட்டியில் அடைத்த தோல்வி ஏமாற்றத்தைக் கொடுக்கிறது என்றார்.

அதேவேளை, தானும் முழு அணியினரும் இந்த வெற்றிகுறித்து பெரு மகிழ்ச்சி அடைவதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி தெரிவித்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களைக் குவித்தது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ரஹ்மத்துல்லா குர்பாஸ் அரைச் சதம் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் இப்ராஹிம் குர்பாஸுடன் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

மொத்த எண்ணிக்கை 122 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மத் ஷா (3), ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழந்தன.

57 பந்துகளை எதிர்கொண்ட ரஹ்மத்துல்லா குர்பாஸ் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களை விளாசினார்.

மத்திய வரிசையில் இக்ரம் அலிகில் 58 ஓட்டங்களையும் ராஷித் கான் 23 ஓட்டங்களையும் முஜிப் உர் ரஹ்மான் 16 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

டேவிட் மாலன், ஹெரி ப்றூக்கு ஆகிய இருவர் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 35 ஓட்டங்களே சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

மாலன் டேவிட் 32 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 66 ஓட்டங்களையும் ஆதில் ராஷித் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ராஷித் கான் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஜிப் உர் ரஹ்மான் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் நபி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்ததுடன் ஆட்டநாயகனாக: முஜிப் உர் ரஹ்மான். தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது

000                                                                

Related posts: