தலைமை பயிற்சியாளர் பொறுப்பு: விண்ணப்பித்தார் ரவி சாஸ்திரி!

Wednesday, July 5th, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, அதன் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரி விண்ணப்பித்துள்ளார்.

அந்தப் பதவிக்கு அவர் விண்ணப்பிக்க இருப்பதாக ஏற்கெனவே அறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவர் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்ததாக பிசிசிஐ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஃபில் சிம்மன்ஸும் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஃபில் சிம்மன்ஸ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான ஆலோசகராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குநராக 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் ரவி சாஸ்திரி- கேப்டன் கோலி இணக்கமான நிலையில் இருந்தனர். எனவே, தற்போதைய பயிற்சியாளர் தேர்வில் கோலியின் பிரதான தேர்வாக ரவி சாஸ்திரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரையில், வீரேந்திர சேவாக், டாம் மூடி, வெங்கடேஷ் பிரசாத், ரிச்சர்ட் பைபஸ், தொட்ட கணேஷ், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், செளரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு அவர்களிடம் நேர்க்காணல் நடத்தி பயிற்சியாளரை தேர்வு செய்யவுள்ளது. முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

Related posts: