தனிமையில் அழுதிருக்கிறேன்– சானியா மிர்சா !

Monday, September 5th, 2016

சானியா மிர்சா. இந்திய மகளிர் டென்னிசின் அடையாளம், இந்திய டென்னிஸ் வானில் மங்காமல் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரம், சர்ச்சைகள், சங்கடங்களையெல்லாம் தாண்டி உச்சங்களை நோக்கியே சிறகடிக்கும் பெண்மைப் பெருமிதம்.

டென்னிசை மூச்சாக சுவாசிக்கும் சானியா, இப்பேட்டியில் டென்னிசுடன், பிற விஷயங்கள் குறித்த தனது கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். முதலில், பெண்ணுரிமை, பெண்ணியவாதி என்பது பற்றி…

‘‘பெண்ணியவாதி என்பதே, நாம் ஏதோ ஆண்கள் உலகில் வாழ்கிறோம் என்பதைப் போல இருக்கிறது. நமக்கு அந்த வார்த்தை அவசியமா? நான் என்னைப் பெண்ணியவாதியாக நினைக்கவில்லை. எல்லோருக்கும் பொதுவான சம உரிமை வேண்டும் என்று எண்ணும் நபர் நான். ஆண், பெண் இரு தரப்பினருக்குமே சம வாய்ப்புகளும், உரிமைகளும், அனைத்து அடிப்படையான விஷயங்களும் கிடைக்க வேண்டும். இதையெல்லாம் சொல்வதற்கு நான் ஒரு பெண்ணியவாதியாக இருக்கவேண்டியதில்லை.

நான் வெளியே ரொம்ப மாடர்னாக தெரிந்தாலும், உண்மையில் மிகவும் பாரம்பரியப் பெண். நான் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டபோது எனக்கு 23 வயது. அது ரொம்ப சின்ன வயது என்று சொன்னவர்கள் அதிகம்’’ என்று புன்னகையை வெளியிடுகிறார், சானியா.இவர் தனது வாழ்வில் சர்ச்சையைச் சந்திக்காமல் தாண்டிவந்த விஷயங்கள் குறைவு. அதற்கு, இந்தியாவின் மகளான இவர், பாகிஸ்தானின் மருமகளான தருணமும் விதிவிலக்கல்ல.

நமது பெருமைக்குரிய பெண், எப்படி பாகிஸ்தானியரான சோயப் மாலிக்கை மணக்கலாம் என்று புயல் கிளம்பியது. இந்த விஷயத்தில் சில சலசலப்புகள் ஏற்படலாம் என்று இரு குடும்பத்தினருமே நினைத்தாலும், இந்த அளவுக்குப் போகும் என்று எண்ணவில்லையாம்.

ஏறக்குறைய இரண்டு வார காலத்துக்கு ஊடக உலகமே சானியா குடும்பத்தைச் சுற்றிச் சுற்றித்தான் சுழன்றது. தங்களின் படையெடுப்பால், சானியாவின் குடும்பத்தை ‘வீட்டுச்சிறை’யில் வைத்தது. அந்த நேரத்தில் தங்கள் வீட்டு ஜன்னல்கள், சின்னச் சின்ன துவாரங்களைக் கூட மூடிவைத்துவிட்டதால் தான் 10 நாட்களுக்கு சூரிய வெளிச்சத்தையே பார்க்கவில்லை என்கிறார் சானியா.

Untitled-3 copy

‘‘ஒவ்வொரு சில மணி நேரத்துக்கும், என்னைப் பற்றி புதிது புதிதாய் ஒரு செய்தி வந்துகொண்டேயிருந்தது. நாம் ஒரு குடும்பத்துக்குள் தலையை நுழைக்கிறோம், காதல் புரிந்து கல்யாணம் செய்துகொள்ளப் போகும் ஒரு ஜோடியின் அந்தரங்கத்தில் பிரவேசிக்கிறோம் என்று உணரவில்லை. ‘நாம் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம், திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்’ என்று எளிமையாகத்தான் நானும் சோயப்பும் நினைத்தோம். ஆனால் மற்றவர்களால் அப்படி சாதாரணமாகப் பார்க்க முடியவில்லை’’– என்கிறார்.

அந்த நேரத்தில் சானியா கவலைகொண்டது எல்லாம், தனது பெற்றோரின் சம்மதம் பற்றித்தானாம். சோயப்தான் தனக்கு சரியான ஜோடி என்று அவர்களிடம் சானியா உறுதியாகச் சொன்னாராம்.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் இந்திய உணவகம் ஒன்றில்தான் சானியாவும், சோயப்பும் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள். ‘‘திருமணம் குறித்த எனது முடிவு, வெகு இயற்கையாக அமைந்தது. ஒரு பெண், ஒரு ஆணைப் பார்த்தவுடன் ஈர்க்கிற முதல் விஷயம், தோற்றம். ஆனால் அதோடு, சோயப்பின் எளிமையும் என்னைக் கவர்ந்தது. அவர் அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன். இந்தியா, பாகிஸ்தானின் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் மிக சாதாரணமாக இருந்தார்’’ என்று சிலிர்ப்பான நினைவுகளில் மூழ்கு கிறார் சானியா.

Untitled-1 copy

இவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் குடும்பம் நடத்துவதில் பிரச்சினை இருந்ததால், துபாய்க்கு இடம்பெயர்ந்தனர். அது நல்ல முடிவாகவே அமைந்தது என்கிறார். தன்னைப் பற்றிய விஷயங்களை, சமீபத்தில் ‘ஏஸ் எகெய்ன்ஸ்ட் ஆட்ஸ்’ என்ற சுயசரிதையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார், சானியா. சுய சரிதை எழுதத் திட்டமிட்டது ஏன் என்ற கேள்விக்கு…

‘‘பெண்கள் டென்னிசில் உங்களுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு, ‘எனக்குத் தெரியவில்லை’ என்று பதில் சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்துப் போய் விட்டது. தவிர, இந்தப் புத்தகம் நம் பெற்றோர்களுக்கும் உதவக்கூடும். இந்தப் பெண் இதையெல்லாம் செய்து டென்னிசில் வளர்ந்து வந்திருக்கிறாள், நாமும் நம் குழந்தையை இப்படி வளர்ப்போம் என்று எண்ணக்கூடும்’’ என விளக்கம் அளிக்கிறார், சானியா. ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் சாம்பியனாக தனது அனுபவ அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி, தன்னைப் பற்றிய கதையை தானே தனது வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமும் இப்புத்தகத்துக்குக் காரணம் என்கிறார், சானியா.

‘‘நான் எளிதில் அணுகமுடியாத, கடினமான நபர் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நான் கல்லைப் போன்றவள் இல்லை. என்னுடைய புத்தகத்தைப் படிப்பவர்கள், எனக்கும் ஒரு மென்மையான பக்கம் உண்டு என்பதை அறிந்து ஆச்சரியப்படுவார்கள். நானும் கூட அடிக்கடி அழுகிறேன். எல்லோர் முன்பாகவும் இல்லாவிட்டாலும், தனிமையில், துக்கம் என்னை அழுத்து கையில் கண்ணீர் சிந்துகிறேன். ஒரு சோகமான படம் பார்த்தாலே போதும், என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்துவிடும்.’’

தான் எப்போதும் வெளிச்சத்துக்கு நடுவிலேயே வளர்ந்ததால்தான் தன்னைச் சுற்றி ஒரு கவசம் போட்டுக்கொள்ள வேண்டிவந்தது என்கிறார் இந்த ஐதராபாத் பெண். தான் வளர்ந்துவந்த காலத்தில், மின்னணு ஊடகம் வளர்ந்துவந்ததும் தான் அதிகம் கவனிக்கப்பட காரணம் என்பது சானியாவின் கருத்து.

விளையாட்டுத் துறையில் ஒரு பிரபலமான முகத்தைத் தேடிக்கொண்டிருந்த  டி.வி.க்களுக்கு,  உலகளவில் ‘டாப் 50’–க்கு உயர்ந்து கொண்டிருந்த தான் சரியான இலக்காகிவிட்டேன் என்கிறார்.

Untitled-1 copy

‘‘ஒரு 17 வயதுப் பெண்ணாக அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் கொழுகொழுவென்று, கன்னங்களில் பருக்களுடன், ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும் பெண்ணாக வளர்ந்தது சிரமமாக இருந்தது. என் மீது வந்து விழுந்த விமர்சனங்கள், பாராட்டுகள் எல்லாமே அளவுக்கு அதிகமாக இருந்தன. பல நேரங்களில் நான் தனிமையில் கதறி அழுதிருக் கிறேன், யாரையும் சந்திக்கக் கூடாது, எதையும் செய்யக் கூடாது என்று முடங்கிப் போயிருக்கிறேன்’’ என்று வெளிப்படையாகப் பேசுகிறார்.

இப்போது 29 வயதை எட்டி விட்டநிலையில், தான் மனரீதியாக முதிர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறுகிறார், சானியா.சரி, குழந்தை குட்டியெல்லாம் எப்போ? ‘‘எனக்கும் குழந்தை குட்டி என செட்டில் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நானும், சமைக்க வேண்டும், குழந்தைகளைப் பேண வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் அதை மட்டுமே செய்ய விரும்பவில்லை. எப்படிச் சமைக்கிறாள், பாடுகிறாள், குழந்தைகளை வளர்க்கிறாள் என்பதை மட்டும் வைத்து ஒரு பெண்ணை முடிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இவையெல்லாம் ஒரு அங்கம்தான் என்றாலும், இவை மட்டுமே ஒரு பெண்ணின் அடையாளம் அல்ல. எனக்கு வாழ்வில் இன்னும் சில இலக்குகள் இருக்கின்றன, அவற்றைச் சாதிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார், இந்த அழகான மூக்குத்திப் பெண்.

Related posts: