டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நடுவர் மீது பந்தை அடித்ததால் வெற்றியை இழந்த கனடா!
Wednesday, February 8th, 2017
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவெலாவ் நடுவர் மீது பந்தை அடித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் உலக குரூப் பிளே ஆப் சுற்றில் தோற்ற கனடா அணி, காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
டேவிஸ் கோப்பை போட்டியில் கனடா-பிரிட்டன் அணிகள் இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்றது.
இதில் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்ட, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவும், பிரிட்டனின் கைல் எட்மன்டும் மோதினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கைல் எட்மன்ட் 6-3, 6-4, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஒரு ஷாட்டை தவறவிட்ட டெனிஸ் ஷபோவெலாவ் கடும் கோபமடைந்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த பந்தை வேகமாக வெளியில் அடித்தார். ஆனால் அந்த பந்து எதிர்பாராதவிதமாக பிரதான நடுவர் (சேர் அம்பயர்) அர்னாட் கேபாஸின் இடது கண்ணில் பலமாகத் தாக்கியது. இதையடுத்து பதற்றமடைந்த டெனிஸ் ஷபோவெலாவ், நடுவரின் அருகில் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்டார். இதன்பிறகு மைதானத்தில் முதலுதவி பெற்ற அர்னாட் கேபாஸ், பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். நடுவர் மீது பந்தை அடித்ததன் காரணமாக டெனிஸ் ஷபோவெலாவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் பிரிட்டன் அணி 3-2 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பிரிட்டன் தனது காலிறுதியில் பிரான்ûஸ சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் ஏப்ரல் 7 முதல் 9 வரை நடைபெறுகிறது. காலிறுதியில் ஸ்பெயின்: மற்றொரு உலக குரூப் பிளே ஆப் சுற்றில் ஸ்பெயின் அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் தனது காலிறுதியில் செர்பியாவை சந்திக்கிறது.

Related posts:
|
|
|


