டி20: நியூஸிலாந்தை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Saturday, February 18th, 2017

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்றிசியல் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டி காக் டக் அவுட்டாக, ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். அவர், வந்த வேகத்தில் டிம் செளதி பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாச, வீலர் வீசிய 5-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஆம்லா. தொடர்ந்து வேகம் காட்டிய ஆம்லா, டிம் செளதி வீசிய அடுத்த ஓவரில் மேலும் இரு பவுண்டரிகளை விளாசினார்.
இதன்பிறகு சேன்ட்னர் வீசிய 9-ஆவது ஓவரில் டூபிளெஸ்ஸிஸ் இரு சிக்ஸர்களை விளாச, காலின் மன்றோ வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை விரட்டி 32 பந்துகளில் அரை சதம் கண்டார் ஆம்லா. அதே ஓவரில் ஆம்லா மேலும் ஒரு சிக்ஸரை விளாச, 10 ஓவர்களில் 98 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா.
அந்த அணி 11.1 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்திருந்தபோது டூபிளெஸ்ஸிஸ் விக்கெட்டை இழந்தது. அவர் 25 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்தது.இதையடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய ஆம்லா 43 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26, பெஹார்டியன் 8, டுமினி 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா.நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

186 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் பிலிப் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. பின்னர் வந்த காலின் மன்றோ டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களில் வீழ்ந்தார்.
இதன்பிறகு இம்ரான் தாஹிர், பெலுக்வாயோ கூட்டணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். பின்னர் வந்தவர்களில் டாம் புரூஸ் 27 பந்துகளில் 33, டிம் செளதி 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 3.5 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெலுக்வாயோ 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
டி20 போட்டியில் மூன்றாவது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் இம்ரான் தாஹிர். அவர் தனது 31-ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் தாஹிர். இலங்கையின் அஜந்தா மென்டிஸ் 26 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.

south

Related posts: