சிறந்த கால்பந்து விருது குரேஷிய வீரருக்கு!

Tuesday, December 4th, 2018

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதை, குரேஷிய வீரர் லூக்கா மாட்ரிச் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக பலோன் டி’ஓர் விருது  கருதப்படுகிறது.

பாரிசில் நடைபெற்ற பெரும் விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரென்ச் கால்பந்து பத்திரிகை, 70 வருடங்களுக்கும் மேலாக இந்த விருதை வழங்கி வருகிறது. விளையாட்டுத்துறையில் பணியாற்றும் நிருபர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில், ஒவ்வொரு ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

2018-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்றதால், அதில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணியின் வீரர்கள் பலர் விருதுக்கான போட்டியில் இருந்தனர்.

அதேநேரம், இறுதி போட்டி வரை வந்து தோல்வியடைந்த அணியான குரேஷியாவின் தலைவர் மற்றும் நட்சத்திர வீரர் லூக்கா மாட்ரிச்சும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை மாட்ரிச் பெற்றார். அதேநேரம் க்ளப் கால்பந்தின் மிகப்பெரிய கோப்பையான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் வெல்ல மாட்ரிச் உறுதுணையாக இருந்தார்.

எனவே, அவர் இந்த விருதைப் பெற அதிக வாய்ப்பு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருதை பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் ஆளுக்கு ஐந்து முறை என பெற்று வந்தனர்.

அதனால், இருவரை தவிர வேறொருவர் வெல்ல வாய்ப்பு அதிகம் இருந்ததால், இந்த விருதின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. பாரிசில் நடைபெற்ற விழாவில் 2018 இற்கான சிறந்த வீரராக மாட்ரிச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக ஃபிபா வழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும், ஐரோப்பிய கால்பந்து கழகம் வழங்கும் சிறந்த வீரருக்கான விருதையும் மாட்ரிச் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: