சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: இறுதிக்கு சென்றது ரியல் மாட்ரிட்!

Thursday, May 3rd, 2018

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ரியல் மாட்ரிட் அணி முன்னேறியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே ஆன போட்டி சாம்பியன்ஸ் லீக் என அழைக்கப்படுகிறது. இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் இரண்டு கட்டமாக ரியல் மாட்ரிட் அணிக்கும், பேயர்ன் மியுனிச் அணிகளுக்கும் இடையே நடைபெற்றது.

மாட்ரிட்டில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றது. மாட்ரிட் அணியின் கரீம் பென்சாமா முதல் பாதியில் அடித்த கோல் மூலம் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இரண்டாம் பாதியிலும் பென்சாமா அடித்த கோலால் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

இரு சுற்றுக்களில் பெற்ற கோல்கள் அடிப்படையில் 4-3 என்ற சராசரியில் ரியல் மாட்ரிட் அணி இறுதிக்கு முன்னேறியது. இதுகுறித்து அதன் பயிற்சியாளர் ஜிடேன் ஸினடேன் கூறியதாவது: சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி எப்போதும் கடினமானதாகும். கால்பந்தில் நாம் கஷ்டப்பட்டால் தான் வெற்றி வந்து சேரும் என்றார்.

பேயன்ர் மியுனிச் அணி பயிற்சியாளர் ஹேநிக்ஸ் கூறியதாவது: இரண்டு சுற்றுகளிலும் எங்கள் அணி சிறந்த அணியாகத் தான் திகழ்ந்தது. போட்டிகளில் நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்தினோம். மாட்ரிட் கோல்கீப்பர் நவாஸ் சிறப்பாக செயல்பட்டார் என்றார். பேயர்ன் அணி தொடர்ந்து 4-வது சீசனாக அரையிறுதியில் தோற்று வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.

லீவர்பூல் அணிக்கும்-ஏஎஸ்.ரோமா அணிக்கும் இடையே நடக்கும் அரையிறுதியில் வெல்லும் அணியை இறுதியில் ரியல் மாட்ரிட் சந்திக்கும்.

Related posts: