குறுகிய மனமுடையவர் டேவிட் கமரோன்

Friday, April 8th, 2016

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் கமரோன், முதிர்ச்சியடையாத ஒருவர் எனவும் குறுகிய மனமுடையவர் எனவும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக இருபதுக்கு-20 கிண்ணத்தை வெற்றிகொண்ட பின்னர், அவ்வணியின் வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீதான தங்களது விமர்சனங்களை அதிகரித்துள்ளனர். குறிப்பாக, இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்குபெறுமா என்றளவுக்குச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையில், தொடர் முடிவடையும்வரை காத்திருந்த அவர்கள், அதன் பின்னர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

உலக இருபதுக்கு-20 தொடரை வெற்றிகொண்ட பின்னர், போட்டியின் பரிசளிப்பு விழாவில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கெதிராக, கிரிக்கெட் அணியின் தலைவர் டெரன் சமி, உணர்வுபூர்வமான கண்டனத்தையும் ஏமாற்றமடைந்த உணர்வையும் வெளிப்படுத்தியிருந்த நிலையில், டெரன் சமிக்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக, டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

‘கிரிக்கெட் சபையின் தலைவர், முதிர்ச்சியடையாதவர், குறுகிய மனமுடையவர். அவர் வெறுமனே திமிர் பிடித்த ஒருவர். எங்களது கிரிக்கெட் சபையுடன், வீரர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எதிர்கொள்ளும் விடயங்களை, ஏராளமான மக்கள் புரிந்துகொள்வதில்லை. உலகிலுள்ள மிகவும் தொழில்முறையற்ற சபையாக அவர்களே இருப்பார்கள்” என பிராவோ தெரிவித்தார்.

டெரன் சமியின் கண்டனத்தில், உலக இருபதுக்கு-20 தொடருக்காக அவ்வணி இந்தியாவுக்குச் சென்றடைந்த பின்னரும்கூட, தங்களது சீருடைகள் தயாராக இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்திய டுவைன் பிராவோ, ‘நாங்கள் இந்தியாவுக்குச் செல்கிறோம், சீருடைகளில் எங்கள் பெயர்கூடக் காணப்பட்டிருக்கவில்லை. அணியின் முகாமையாளர், எங்கள் (பயிற்சி) முகாமிலிருந்து விலகிச் சென்று, சீருடைகளை ஏற்பாடு செய்ததோடு, அவற்றில் எங்களது பெயர்களும் இலக்கங்களும் பதிப்பிப்பதை உறுதிசெய்தார். தொடர் முழுவதுமே, தொப்பியின்றியே நாம் பங்குபற்றினோம்” என அவர் குறிப்பிட்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் அதன் வீரர்களுக்குமிடையிலான முறுகலில், ஊதியப் பிரச்சினை முக்கியமானது. வீரர்களுக்கான ஊதியத்தை, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்களின் சபையுடனேயே கிரிக்கெட் சபை பேரம்பேசுகின்ற போதிலும், கிரிக்கெட் வீரர்களின் சபையை, கிரிக்கெட் வீரர்கள் அங்கிகரிக்கவில்லை. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டுவைன் பிராவோ, இத்தொடருக்காக இந்தியா சென்ற 15 வீரர்களில், ஒரேயொரு வீரர் மாத்திரமே மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்களின் சபையைச் சேர்ந்தவரெனச் சுட்டிக்காட்டினார்

Related posts: